×

ரூ.13 லட்சம் கோடி பொதுத்துறை சொத்துகளை விற்ற ஒன்றிய அரசு : இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் தாக்கு

கோவை: பொதுத்துறை சொத்துக்கள் ரூ.13 லட்சம் கோடிகளுக்கு மேல் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கப்பட்டுவிட்டது’ என்று இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் அமர்ஜித் கவுர் கோவை ஜீவா இல்லத்தில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழக அரசு 8 மணி நேரம் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தியுள்ளது. இதை நாங்கள் ஏற்க மாட்டோம். இந்த சட்டத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால், தொடர்ந்து போராடுவோம். ஒன்றிய அரசு தொடர்ந்து தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் விரோத திட்டங்களை அமலாக்கி வருகிறது. இதை எதிர்த்து நாடு தழுவிய அளவில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம்.

காரல் மார்க்ஸ் பிறந்த தினமான மே 5ம் தேதி முதல் தமிழ்நாட்டில் பாதயாத்திரைகள், இரண்டு சக்கர வாகன பயணங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம். இது நாடு தழுவிய அளவிலும் நடைபெறும். பொதுத்துறை சொத்துக்கள் 13 லட்சம் கோடிகளுக்கு மேல் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கப்பட்டுவிட்டது என்று அரசு புள்ளி விபரம் தெரிவிக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத்தும் வரி வெறும் 2 சதவீதம் தான். ஆனால், நடுத்தர மற்றும் சிறு, குறுந்தொழில் செய்கிறவர்கள் தான் முழுமையாக ஜி.எஸ்.டி. வரி செலுத்துகிறார்கள். ஜி.எஸ்.டி. எல்லா இடத்திலும் உள்ளது. உற்பத்தியில், விநியோகத்தில், உணவுப் பொருட்களில் கூட ஜி.எஸ்.டி. உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post ரூ.13 லட்சம் கோடி பொதுத்துறை சொத்துகளை விற்ற ஒன்றிய அரசு : இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Union government ,Communist National Secretary of India ,Thaku ,Coimbatore ,Communist National Secretary of India.… ,Communist National Secretary ,Thakku ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் சந்தையில் வெங்காய...